உலகக் கிண்ணக் காற்பந்து: ஸ்பெயின் அபார வெற்றி; ஈரான் மகிழ்ச்சி

உலகக் கிண்ணக் காற்பந்து: ஸ்பெயின் அபார வெற்றி; ஈரான் மகிழ்ச்சி

2 mins read
62ac4191-3a64-454c-9860-24125d684990
சவூதி அரேபியாவுக்கு எதிராக கோல் அடித்த உற்சாகத்தில் இளம் புயல் லமின் யமால். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் அணிகள் பல தங்களது திறமையை நிரூபித்து வருகின்றன.

திங்கட்கிழமை பின்னிரவு (ஜூன் 22) நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் சவூதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஸ்பெயின் கடந்த வாரம் கேப் வெர்டே அணிக்கு எதிராகக் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் ஆட்டத்தை முடித்தது. இதனால் ஸ்பெயினுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

அதை ஈடுகட்டும் வகையில் சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்பெயின் அதிரடி காட்டியது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் லமின் யமால் முதல் கோல் அடித்தார். அதன்பின்னர் 21, 24வது நிமிடங்களில் ஒயர்சபல் இரண்டு கோல்களைப் புகுத்தினார். 49வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு மீண்டும் ஒரு கோல் கிடைத்தது.

தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் சவூதி அரேபியா கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றமடைந்தது.

கேப் வெர்டே சமநிலை

உருகுவேவுக்கும் கேப் வெர்டேவுக்கும் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கேப் வெர்டே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆனால் உருகுவே வீரர்கள் 44, 45(+6) நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து முன்னிலை பெற்றனர்.

இருப்பினும் கேப் வெர்டெ விட்டுக்கொடுக்காமல் ஆடி 61வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பைக் கோலாக மாற்றியது. அதன் பின்னர் இரு அணிகளும் தற்காப்பில் கவனம் செலுத்தியதால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது.

ஈரான் மகிழ்ச்சி

முன்னணி அணியான பெல்ஜியம் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் நேத்தன் காய்க்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனால் பெல்ஜியம் தற்காப்பு ஆட்டத்தில் இறங்கியது.

ஈரானுக்கு ஒரு புள்ளி கிடைத்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அதன் வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நியூசிலாந்து சோகம்

எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் நியூசிலாந்து கோல் அடித்தது. இருப்பினும் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் எகிப்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

58, 67, 82 ஆகிய நிமிடங்களில் எகிப்து வீரர்கள் கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

குறிப்புச் சொற்கள்