திருவள்ளூர்: அரசுப் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் பலியானது திருவள்ளூரில் பொது மக்கள் மத்தியில் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மகன் மோகித் (11வயது). கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) பள்ளிக்குச் சென்ற மோகித், மதியம் நடைபெறும் தேர்வுக்காக வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
உணவு இடைவேளையின்போது வகுப்பறைக்கு அருகே உள்ள பக்கவாட்டுச் சுவர் பகுதியில் அமர்ந்து சக மாணவர்களுடன் பேசிக் கொண்டே சிறுவன் உணவு அருந்தியுள்ளான்.
அப்போது அந்தப் பக்கவாட்டுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பதறியடித்து ஓட்டம்பிடிக்க, மாணவன் மோகித் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க நேரிட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி கட்டடத்தை முறையாகப் பராமரிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
காவல்துறையினர் சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்ட போதிலும், மாணவனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், மாணவனின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

