சென்னையில் மட்டும் 133 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்

சென்னையில் மட்டும் 133 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்

2 mins read
b2c80860-81da-4b15-a607-8d0c8e1dee2d
பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வழங்கும் மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை சென்னையில் மட்டும் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின்கீழ் அரசு மாநகரப் பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனா்.

சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்குத் தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மாநகரப் போக்குவரத்துக்கழகம் உயா்த்தி உள்ளது.

இந்த நிலையில், மகளிர் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்முதல் தற்போது வரை சென்னை மாநகர விடியல் பயணப் பேருந்துகளில் சுமார் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மகளிர் விடியல் பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 13.59 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2024 ஏப்ரல் மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளைவிட இது 23 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்