சிவகங்கை: இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர்களான மாமன்னர் மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாக்கள் அக்டோபர் மாத இறுதியில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளன.
இந்தத் தொடர் முக்கிய நிகழ்வுகளின்போது சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், அதற்கான அதிகாரபூர்வ உத்தரவை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24ஆம் தேதி மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 27ஆம் தேதி காளையார்கோவிலில், சமுதாய மக்கள் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து வரும் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் பசும் பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாக்களில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் சிவகங்கை மாவட்டம் வழியாகப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 20 முதல் 31ஆம் தேதி வரை பி.என்.எஸ்.எஸ். தடைச் சட்டம் 163 (1) கீழ் (பழைய சட்டப்படி 144) தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் மாவட்டத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
