ரூ.2,438 கோடி மோசடி: அமலாக்கத் துறை அதிரடி சோதனை

1 mins read
3c1df55d-9461-46dc-9460-d9852a1a270d
காவல்துறை அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ‘ஆருத்ரா கோல்ட்’ நிதி நிறுவன மோசடி தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சென்னை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புள்ள 15 இடங்களில் இந்தச் சோதனை நடந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி, ஒரு லட்சம் பேரிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வசூல் செய்த மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, காவல்துறை அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், மனைவியுடன் துபாய்க்குத் தப்பியோடினார் ராஜசேகர். பின்னர், அவர் மட்டும் அங்கு கைது செய்யப்பட்ட நிலையில், உஷா வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளார்.

இவ்வழக்கில் இதுவரை 13 பேர் கைதாகி உள்ளனர். மேலும், ராஜசேகர், உஷா ஆகிய இருவரும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டது.

இதையடுத்து, ‘ஆருத்ரா கோல்ட்’ நிறுவன நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் இடங்களில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பில் பல்வேறு மின்னிலக்க ஆவணங்களை அதிகாரிகள் கண்டெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்