போபால்: மத்தியப் பிரதேசத்தில் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டில் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற சோஹன் சிங்கின் தண்டனைக் காலம், மேல் முறையீட்டுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால், எட்டு ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, தண்டனைக் காலம் முடிவுற்றும் கூடுதல் காலம் சிறையில் இருந்த சோஹன் சிங்குக்கு மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஒரு குற்றவாளியின் தண்டனைக்காலம் முடிந்த பின்னரும் அவரை விடுவிக்கத் தவறியதற்காக மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துக்கொண்டது.
இந்த வழக்கில் மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தவறான வாக்குமூலங்களையும் நீதிமன்றம் விமர்சித்தது.