25 சவரன் தங்கத்தைத் தொலைத்தது தங்கம்; மீட்டெடுத்தது பெண் சிங்கம்

2 mins read
ba96910c-6264-4eab-8049-6bb36c11311d
குப்பையில் வீசப்பட்ட நகைகளை மீட்டுத் தந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. - படம்: ஊடகம்

மதுரை: குப்பையில் வீசப்பட்ட 25 சவரன் நகையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டுக் கொடுத்த சம்பவம் மதுரையில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி 75ஆவது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கம். விவசாயியான அவர், வரும் தை மாதம் நடைபெற உள்ள தமது மகளின் திருமணத்திற்காக 25 சவரன் தங்க நகைகளைச் சேமித்து, அவற்றை ஒரு சிறிய தலையணைக்குள் வைத்துப் பத்திரப்படுத்தி இருந்தார்.

திருமணம் நடைபெற வேண்டிய நாள் நெருங்குவதால் வீட்டை சுத்தம் செய்துள்ளனர் குடும்பத்தினர்.

அப்போது வீட்டில் இருந்து தலையணை, துணிகள் உள்ளிட்ட பழைய பொருள்களை மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.

புதன்கிழமை (டிசம்பர் 3) காலை தலையணையில் 25 சவரன் தங்க நகையை வைத்திருந்தது நினைவுக்கு வந்த நிலையில், பதறியடித்து ஓடிய தங்கம், தமது வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தேடியுள்ளார். ஆனால், நகைகள் கிடைக்கவில்லை.

உடனடியாக 75ஆவது வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்துள்ளார் அவர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்துத் தேடச் சொன்னார் அந்த மேற்பார்வையாளர்.

அப்போது மீனாட்சி என்ற தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டியில் தேடிப் பார்த்து, தலையணையைக் கண்டுபிடித்தார். அதனுள் 25 சவரன் நகை இருப்பது தெரியவந்தது.

உடனடியாக நகையின் உரிமையாளர் தங்கத்தைத் தொடர்புகொண்டு அதனை ஒப்படைத்தனர்.

மகளின் திருமணத்திற்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்து வைத்த 25 சவரன் நகையை மீட்டுத்தந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் தங்கம்.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்