அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து 52 கிராமங்கள் போராட்ட அறிவிப்பு

1 mins read
7533f8d8-a324-4e75-8482-121378809b5a
ஆலோசனைக் கூட்டத்துக்காக கூடிய கிராம மக்கள். - படம்: ஊடகம்

மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

நவம்பர் 28ஆம் தேதி இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை அன்று 52 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழகர்கோவிலில் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மதுரை மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள 2015 ஹெக்டர் பரப்பளவில் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்தால் இப்பகுதியிலுள்ள தொல்லியல் சின்னங்கள், இயற்கை வளங்கள் அழிந்துவிடும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தும் நடத்தியும் வரும் நிலையில், 52 கிராம மக்கள் ஒன்றுகூடி எடுத்துள்ள முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்