சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானம்

படம்: ஊடகம்

03 Sep 2024 - 5:58 pm

2 mins read

சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் 528 லிட்டர் தாய்ப்பால் தானமாகப் பெறப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் 2,962 பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு தானம் பெறும் பணிகள் நடந்து வரும் நிலையில், சேலம் மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு ஆகஸ்ட் வரை 7 ஆயிரத்து 135 தாய்மார்கள் 528 லிட்டர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளனர்.

தாய்மார்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் இது சாத்தியமாகி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு சார்பாக, தாய்ப்பால் வாரவிழா கடந்த 1ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம், அதன் நன்மைகள் குறித்து தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி மாணவிகளிடம் விளக்கிக் கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கூறியபோது, தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தியும் சிறந்த ஊட்டச்சத்தும் புத்திக் கூர்மையும் பெறுகின்றனர். குழந்தைக்குத் தேவையான அளவு தண்ணீர் தாய்ப்பாலிலேயே கிடைக்கிறது. தாய்-சேய்க்கு இடையே ஆரோக்கியமான உறவு வளரும். தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கமுடியும்.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குழந்தைகளுக்கு முதல் தடுப்பு மருந்தாகவும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கொடுக்கும் அருமருந்தாகவும் தாய்ப்பால் உள்ளது. சீம்பாலில் உள்ள வௌ்ளை அணுக்கள் வயிற்றுப் போக்கு, சுவாசத்தொற்று போன்ற நோய்களைத் தடுக்கும் சக்தி வாய்ந்தவை.

சர்க்கரைத் தண்ணீர், தேன் கலந்த தண்ணீர் புகட்டுவது, வசம்பு கொடுப்பது, சாம்பிராணி புகை போடுவது, மூக்கில் ஊதி சளி எடுப்பது ஆகியவற்றை குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்