தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 85 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு

2 mins read
925899c3-bfcd-455f-8d08-95dc3e682142
திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சரிபார்த்த அதிகாரிகள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 85 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகச் செய்திகள் வெளிவந்து உள்ளன.

இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களான 6.41 கோடியில் 13.24 விழுக்காடு ஆகும் என ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் ‘எஸ்ஐஆர்’ (SIR) எனப்படும் வாக்காளர் வரைவு பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓ எனப்படும் வாக்காளர் சரிபார்ப்பு அதிகாரிகள், சரியான முறையில் செயல்பட முடியாமல் சிரமத்தில் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர்களும், விண்ணப்பத்தில் கேட்டுள்ளபடி 2002ஆம் ஆண்டு வாக்கு செலுத்திய விவரங்களைப் பெற முடியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இதுவரை நடைபெற்றுள்ள எஸ்ஐஆர் பணிகள் குறித்த விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதேநேரம் வரைவுப் பட்டியலில் இருந்து ஏறத்தாழ 85 லட்சம் பேரின் பெயர்களை நீக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய செய்தித்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இறந்தவர்கள், வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்கள் நீக்கப்படுவோரில் அடங்குவர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 34.75 விழுக்காட்டினரின் பெயர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 12.09 விழுக்காட்டினர் நீக்கப்படக் கூடும்.

செங்கல்பட்டில் 5.31 லட்சம் பேரும் மதுரையில் 3.81 லட்சம் பேரும் சேலத்தில் 2.09 லட்சம் பேரும் திருவண்ணாமலையில் 2.08 லட்சம் பேரும் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது இந்தியா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக வெளியான செய்தி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்