புதுடெல்லி: இரு நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அம்பாசமுத்திரம் மரச்செப்புச் சாமான்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் பாராம்பரியப் பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது.
அம்பாசமுத்திரத்தில் கடந்த இரு நூற்றாண்டுகளாக மரத்தாலான பல்வேறு விளையாட்டுப் பொருள்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களில் காணப்படும் நுணுக்கமான மர வேலைப்பாடுகள்தான் இதன் சிறப்பம்சமாகும்.
இயந்திரங்களின் உதவியின்றி, இவை முழுவதும் மனிதக் கைகளால் உருவாக்கப்படுகின்றன. அண்மைக் காலமாகத்தான் சிறிய ரக இழைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டுச்சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாத்திரங்கள், அம்மி, ஆட்டுக்கல், சிறிய மேசை, நாற்காலிகள், குழந்தைகள் இயக்கும் விளையாட்டுப் பொருள்கள் என அனைத்தும் மிக சிறிய வடிவில் அழகாகச் செதுக்கப்படுகின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கும் வகையில் இந்தப் பொருள்கள் உருவாக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், அம்பை, பரணி மரவண்ணக் கடைசல் கைவினைஞர்கள் நலச்சங்கம் சார்பில் இப்பொருள்களுக்குப் புவிசார் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு குறியீடு வழங்கியுள்ளது.
இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை துறையால் வெளியிடப்படும் புவிசார் குறியீடுகள் இதழில் அம்பாசமுத்திரம் செப்புச் சாமான்கள் (மர விளையாட்டுப் பொருள்கள்) எனப் பட்டியலிடப்பட்டு அறிவித்துள்ளது.

