சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்குத் திட்டமிட்ட 10 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பெண்கள், தமிழ் மொழி ஆகியவற்றிற்கு எதிராக பெரியார் பேசியதாகக் கூறி சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. சீமானின் இந்தக் கருத்துக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பெரியார் ஆதரவு அமைப்புகள் ஆகியோர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக ராயப்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தங்கி அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
ஹோட்டல் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது.

