சென்னை: சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததை அடுத்து, நவம்பர் 28 முதல் மூன்று நாள்களுக்குப் பூங்கா மூடப்படுகிறது.
அங்குள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் நவம்பர் 27ஆம் தேதி சில பறவைகள் உயிரிழந்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், அது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
இருப்பினும், பரிசோதனைக்காக இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படும்.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பூங்காவில் உள்ள பிற பறவைகள், விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இந்நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
