சென்னை: 41 உயிர்களைப் பலிவாங்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் கைப்பாவை கூட்டாளியாக பாஜக செயல்படுவதாகவும் அவர் தாக்கிப் பேசினார்.
மூன்று பெரிய பேரழிவுகளால் மாநிலங்கள் பாதிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகினர். அப்போது எல்லாம் மத்திய நிதியமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடவோ அல்லது நிதியை விடுவிக்கவோ இல்லை. ஆனால், கரூர் செல்வதற்கு மட்டும் தயாரானது எப்படி என்று திரு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளதாக ‘இந்தியா டுடே’ ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம், கும்பமேளா மரணங்கள் அல்லது குஜராத்தில் நடந்த இறப்புகள் போன்ற சம்பவங்கள் பற்றி விசாரிக்க பாஜக உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பவில்லை என்பதையும் முதல்வர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“ஆனால் கரூர் பகுதிக்கு, அவர்கள் உடனடியாக ஒரு குழுவை அனுப்பினர்,” என அவர் குறிப்பிட்டார்.
“இதுபோல் நடந்து கொண்டிருப்பதற்கு, தமிழ்நாட்டின் மீதான அக்கறை காரணமல்ல, நெருங்கி வரும் தேர்தலை அணுகுவதற்காகவே. அவர்கள் அரசியல் லாபம் தேடுகிறார்கள் அல்லது யாரையாவது அச்சுறுத்த இதுபோல் நடந்துகொள்கிறார்கள்,” என்று ஸ்டாலின் மேலும் கூறினார்.
பாஜகவை கடுமையாகச் சாடிய அவர், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ள அதிமுகவையும் விமர்சித்தார். “எதிர்க்கட்சியான அதிமுக, மாநிலங்களின் முன்னேற்றத்தை விரும்பாத பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒரு பொம்மையாக மாறியுள்ளது.
“பாஜகவை ஆதரிக்க அதிமுகவுக்கு ஏதேனும் பொதுவான காரணம், பொது நன்மை அல்லது பொதுவான திட்டம் உள்ளதா?” என்றும் அவர் வினவினார்.
தமிழ்நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை கடற்படையின் தாக்குதல்களுக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படத் தவறிவிட்டதாகத் தெரிவித்தார்.
“எங்கள் மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையினரின் தாக்குதல். நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு எதுவும் செய்யாமல் உள்ளது.
“கச்சத்தீவை வழங்க முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். ஆனால், இந்திய வெளியுறவுத்துறை அதற்குப் பதிலளித்ததா? தமிழக மீனவர்கள் அவர்களுக்குக் குறைவானவர்கள் போல் தெரிகிறது. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? தமிழகமும் தமிழரும் ஏன் மத்திய அரசுக்கு கசப்பாகத் தெரிகிறார்கள்?” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.