‘கறுப்பு ஜூலை’ கலவரம்: நாடாளுமன்றக் குழு அமைப்பு

‘கறுப்பு ஜூலை’ கலவரம்: நாடாளுமன்றக் குழு அமைப்பு

கோப்புப் படம்: தினமணி

29 Nov 2026 - 7:00 pm

2 mins read

கொழும்பு: இலங்கையில் 1983இல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை, அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாவித்ரி பால்ராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சனிக்கிழமை (நவம்பர் 28) நாடாளுமன்றத் தலைவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அக்குழுவில் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இரு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது குறித்தும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் எனத் திரு ஜகத் விக்ரமரத்ன கூறினார்.

வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து 1983ல் வன்முறை வெடித்தது.

ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை நாடு முழுவதும் நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தில் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனி நாடு கோரிக்கையை வலியுறுத்திய விடுதலைப் புலிகள், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இணை அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றிலும் வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டதாக 2009, மே 18ஆம் தேதி இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால மோதலில் 27,000 வீரர்கள் உயிரிழந்தனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2006, ஜூலையில் தொடங்கிய இறுதிக்கட்டப் போரில் 6,200 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதே இறுதிக்கட்ட மோதலில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 22,000 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கறுப்பு ஜூலை’ கலவரம், அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்