சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் அசம்பாவிதங்களைத் தடுக்க வெள்ளி, சனி (டிசம்பர் 5, 6) ஆகிய இரு நாள்களும் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் பரவலாக பயணிகளிடம் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். மோப்ப நாய்களின் துணையோடு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் சோதிக்கப்பட்டனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை நடத்தினர்.
ரயிலில் பயணம் செய்ய வந்தவர்களின் உடைமைகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பயணிகளும் சோதிக்கப்பட்ட பின்னரே ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு பரிசோதனை நடைபெற்றது.
ரயில் நிலைய நடைமேடைகள், சரக்கு கையாளும் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எஸ்டிபிஐ, தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலியிலுள்ள மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

