சென்னை-கோவா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை-கோவா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

20 Oct 2026 - 8:24 pm

1 mins read

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லத் தயாராக இருந்த இண்டிகோ பயணிகள் விமானத்துக்குத் திங்கட்கிழமை (அக்டோபர் 19) மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 5.40 மணிக்கு கோவா நோக்கிப் புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, ஆலோசனை நடத்திய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு, அந்த மிரட்டலை ‘குறிப்பிட்ட தீவிரமான மிரட்டல்’ என வகைப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, விமானம் உடனடியாக ஓடுதளத்தில் இருந்து அகற்றப்பட்டு, ஒதுக்குப்புறமான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாலை 6.55 மணிக்குள் விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர மோப்ப நாய் சோதனைகள், தீவிர நாசவேலை எதிர்ப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். எனினும், இரவு 9.20 மணி அளவில் அது ஒரு போலி மிரட்டல் என்பது உறுதிசெய்யப்பட்டது.

ஏறக்குறைய ஐந்து மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு அந்த விமானம் கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

குறிப்புச் சொற்கள்