ஈரோடு: வாழைப்பழம் சாப்பிட்ட ஐந்து வயதுச் சிறுவன் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு அன்னை சத்யா நகரில் உள்ள மாணிக், மகாலட்சுமி தம்பதியினரின் மகன் சாய் சரண். கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) இரவு நேரம் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்ததால் பாட்டி வீட்டில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, வீட்டிலிருந்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து சிறுவன் சாப்பிட்டான். அப்போது திடீரென்று இருமல் வந்து புரையேறிவிட்டது.
தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்படவே, தனியார் மருத்துவமனைக்கு சாய் சரண் கொண்டு செல்லப்பட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அதனைத் தொடர்ந்து, கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழைப்பழம் உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் சிக்கிக்கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால், நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய உயிர்வாயு தடைப்பட்டு, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழத் துண்டை மருத்துவர்கள் வெளியே எடுத்ததாக காவல்துறையினர் கூறினர்.

