கோவையில் போதைப்பொருளுக்கு எதிராக 228 இடங்களில் சோதனை

கோவையில் போதைப்பொருளுக்கு எதிராக 228 இடங்களில் சோதனை

கோப்புப் படம்: மாலை மலர்

11 Oct 2026 - 6:52 pm

2 mins read

சென்னை: கோவையில் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 228 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

சில இடங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் கஞ்சா, புகையிலை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கவும், விற்பனையை ஒழிக்கவும் கோவை மாவட்ட காவல்துறை சூப்பிரிடென்டண்ட் பவன்குமார் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து விற்பனை நடைபெறும் பகுதிகளில் அதிரடியாகச் சோதனை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சனிக்கிழமை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் 51 கிலோ குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 40 வியாபாரிகள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் 40 கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையும் (அக்டோபர் 11) 2வது நாளாகச் சோதனை நடந்தது. அதிகாலையிலிருந்தே கோவை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் தங்கி படித்துவிட்டு பாதியில் படிப்பை நிறுத்திய முன்னாள் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.

அதே போன்று சந்தேகம் ஏற்படும் கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் 12 ஆய்வாளர்கள், 480 காவலர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேட்டுப்பாளையம், கருமத்தப்பட்டி, சூலூர், செட்டிபாளையம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கியுள்ள இளைஞர்களின் அறைகளிலும் இந்தச் சோதனை நடந்தது.

சில இடங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிடிப்பட்ட இளையர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதே போன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்கவும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்