சென்னை: சென்னை சென்ட்ரல் பகுதியில் அமையும் மத்திய சதுக்க வளாகத்தில் கட்டப்படவுள்ள சென்னை சென்ட்ரல் கட்டடத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காணொளி வழியாக அடிக்கல் நாட்டினார்.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் ரூ.350 கோடி செலவில் அக்கட்டடம் எழுப்பப்படவிருக்கிறது. நான்கு அடித்தளங்கள், ஒரு தரைத்தளம், 27 மாடிகளுடன் அக்கட்டடம் அமைந்திருக்கும்.
இப்போதுள்ள சென்னை சென்ட்ரல் ரயில்வே முனையம் சென்னை மாநகரின் அடையாளமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், புதிய 27 மாடிக் கட்டடம் சென்னை மாநகர் குறித்த கண்ணோட்டத்தை மறுவரையறை செய்வதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
அக்கட்டடத்துடன், ஒரு கடைத்தொகுதி, முக்கியக் கட்டடங்களை இணைக்கும் சுரங்கப்பாதைகள், 600 கார்களையும் 1,600 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதிகொண்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றையும் மத்திய சதுக்க வளாகம் உள்ளடக்கி இருக்கும்.
சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் கட்டடம், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, பார்க் மற்றும் பார்க் டவுன் ரயில் நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கும் நடைக்கூடமும் மத்திய சதுக்க வளாகத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்குவேர், லண்டனின் டிராஃபல்கர் ஸ்குவேர் போன்ற உலகின் புகழ்பெற்ற சதுக்கங்களால் ஈர்க்கப்பட்டு, அதனடிப்படையில் சென்னை சென்ட்ரல் கட்டடத்தைக் கட்ட சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் பன்னோக்குக் கட்டடத்தின் பெரும்பான்மையான பகுதி அலுவலகப் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும் எஞ்சிய பகுதிகளில் ஹோட்டல், கடைகள், திரையரங்கம் ஆகியவை செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை சென்ட்ரல் கட்டடத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் ரெனாட்டஸ் புரோஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கடந்த டிசம்பர் மாதம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை இவ்வாண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

