சென்னை: அந்தமான் கடற்பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வரும் காற்றுச் சுழற்சி, வரும் 27ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தக் காற்றுச் சுழற்சி புயலாக வலுபெற்றால் அதற்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்படும்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அதையடுத்து தமிழகம், கேரளா, லட்சத்தீவு, அந்தமான் & நிக்கோபார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாள்களாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மலாக்கா நீரிணையிலும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.
இது மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் புயல் சின்னத்தின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சென்னை, டெல்டா, தென் மாவட்டங்களில் நவம்பர் 30 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
மழையின் தீவிரத்தன்மையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, திங்கட்கிழமை முதல் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மாநில அவசரகால செயல்பாட்டு மையம், நிலைமையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

