திருவண்ணாமலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நீடித்து வந்த இத்திருவிழாவுக்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இன்றைய புனித நாள், அதிகாலை நான்கு மணியளவில் ஆலயச் சந்நிதியின் அர்த்தமண்டபத்தில் பரணி தீபமேற்றுதலுடன் தொடங்கியது.
யாகங்கள், சிறப்புப் பூசைகள் ஆகியவை நடந்த பின்னர் ஐம்பூதங்களைக் குறிக்கும் ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன. பிறகு உண்ணாமுலை அம்பாளின் சந்நிதிக்கு புனிதத் தீ கொண்டுவரப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைப்பெயர்களை உரக்கச் சொல்லி ஆரவாரித்தனர்.
கூட்டத்தைச் சமாளிக்க, 15,000 காவல்துறையினர் நகரம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். புனிதப் பயணிகளுக்கா 4,700க்கும் அதிகமான பேருந்துகளும் மேலும் பல ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அண்ணாமலையை வலம் வரும் பக்தர்கள் செல்லும் 14 கிலோமீட்டர் பாதை நெடுக உணவு, தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலையில் பெய்த மழையால் கூட்டம் சற்று குறைந்திருந்தபோதும் கூட்டம் நாள் முழுவதும் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

