தென்மாவட்டங்களில் மின்னிலக்கப் பண மோசடி; 17 பேர் கைது

தென்மாவட்டங்களில் மின்னிலக்கப் பண மோசடி; 17 பேர் கைது

2 mins read
05e9364f-41fb-46c3-886f-2804e916e01c
பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு வரும் குறுந்தகவலை தேர்வு செய்தால் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய முடியும் என்றும் அதன்மூலம் டாலர் மதிப்பு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. - சித்திரிப்புப் படம்: ஃபோர்ப்ஸ்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மின்னிலக்கப் பண (கிரிப்டோகரன்சி) மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 40,000 பேர் ஏமாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏறக்குறைய ரூ.400 கோடி பணத்தை பொதுமக்களிடம் வசூலித்த மோசடிக்கும்பல் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு கைப்பேசி செயலிகள் மூலம் இந்த மோசடியைச் சிலர் அரங்கேற்றியுள்ளனர். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், முதலீடு செய்யும் பணம் வெறும் 45 நாள்களில் இரட்டிப்பாகும் என்ற போலி வாக்குறுதியை நம்பி ஏமாந்துள்ளனர்.

மேலும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு வரும் குறுந்தகவலைத் தேர்வு செய்தால் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய முடியும் என்றும் அதன்மூலம் டாலர் மதிப்பு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்த சிலருக்கு, தொடக்கத்தில் கவர்ச்சிகரமான தொகையைத் திரும்பக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், லட்சம், கோடி என்று முதலீடு செய்ய வைத்தபிறகு இரு செயலிகளையும் முடக்கிவிட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த மோசடி தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், பொருளியல் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மோசடியில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகள் பயன்படுத்திய 13 முக்கியமான வங்கிக் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. போலிச் செயலிகள் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பு இருக்கக்கூடும் எனச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மின்னிலக்க நாணயம்பண மோசடிஅமெரிக்க டாலர்வங்கிவிருதுநகர்சிவகங்கைகைப்பேசி