சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்காததைக் கண்டித்து, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு
செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகளும் நடைபெற்று வந்தன.
இதையடுத்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. அந்த வங்கியின் அதிகாரிகள் மதுரையிலும் கோவையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு நிராகரித்துவிட்டது. இதனால் திமுக, காங்கிரஸ், மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், அவ்விரு நகரங்களிலும் குறைவான மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.
எனினும் மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதிப் பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பாஜக அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதையடுத்து மதுரையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

