சென்னை: சென்னை விமான நிலையத்தில், 35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளைக் கடத்தியதாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) பாலிவுட் துணை நடிகரான 32 வயது விஷால் பிரம்மா கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரகசியத் தகவல் வந்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகளும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்தி மொழியில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தில் துணை நடிகராக நடித்த அசாமைச் சேர்ந்த விஷால் பிரம்மாவிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவரது பெட்டியின் அடிப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அதில் நெகிழிப்பை ஒன்றில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பொருளைக் கண்டனர்.
சோதனைசெய்த அதிகாரிகள் அது போதைப்பொருள்தான் என்பதை உறுதிசெய்தனர்.
தான் போதைப்பொருள் கடத்தவில்லை எனக் கூறிய அந்த நடிகர், கம்போடியாவிலிருந்து சென்னைக்குச் சிங்கப்பூர் வழியாக வந்ததாகக் கூறினார்.
மேலும், கம்போடியாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெட்டியைத் தன்னிடம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பெட்டியைப் பெற்றுக்கொள்ள சென்னையில் ஒருவர் வருவார் என்றும் அவர் சொன்னதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
அதைத்தொடர்ந்து, விஷாலைக் கைதுசெய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களில் சென்னை விமான நிலையத்தில் இருமுறை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16ஆம் தேதி எத்தியோப்பியாவிலிருந்து வந்த கென்யாவைச் சேர்ந்த ஒருவர் 2 கிலோ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டார்.
அதற்கு முன்பு, செப்டம்பர் 1ஆம் தேதி சாக்லேட் தகரக் கலனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.6 கிலோ போதைப்பொருளைச் சென்னை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.