தமிழகக் காவல் நிலையங்களுக்கு செலவு நிதி ரூ.71 கோடியாக உயர்வு

தமிழகக் காவல் நிலையங்களுக்கு செலவு நிதி ரூ.71 கோடியாக உயர்வு

ஊழலை முற்றிலுமாக ஒழிக்க எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்துவது அவசியம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது
கோப்புப் படம்: நக்கீரன்

21 Oct 2026 - 5:50 pm

1 mins read

தமிழகத்தில் லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்குமான அன்றாட சில்லறைச் செலவின நிதியை உயர்த்தி ரூ.71,154,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல், போதையற்ற சமூகத்தை உருவாக்குதல் போன்ற பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நிர்வாகப் பணிகள் அதிகரித்துள்ள சூழலில், அன்றாடச் செலவினங்களை எதிர்கொள்ள அதிகாரபூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்துவது அவசியம் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் விஜய் அறிவித்ததற்கு இணங்க இந்த நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த எதிர்பாராச் செலவு நிதி, வகைகளுக்கு ஏற்ப முறையே ரூ.3,750லிருந்து ரூ.30,000 ஆகவும், ரூ.6,000லிருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.8,250லிருந்து ரூ.50,000 ஆகவும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி உயர்வு மூலம் காவல் நிலையங்கள் நிர்வாக, செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் எதிர்நோக்கிய சிரமங்கள் களையப்படும். அதன்வழியாக நேர்மையான நிர்வாகத்திற்கு இது வழிவகுக்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்