உற்பத்தி குறைவால் பட்டாசு விலை 15% வரை உயர்வு

உற்பத்தி குறைவால் பட்டாசு விலை 15% வரை உயர்வு

படம்: மாலை மலர்

05 Oct 2026 - 5:26 pm

2 mins read

சிவகாசி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்கும் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன. அதேவேளையில், பட்டாசு உற்பத்தி குறைந்ததன் காரணமாக ஆலைகளிலேயே அதன் அடக்க விலை 15 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல் பொதுமக்கள், வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இருப்பினும், பேரியம் நைட்ரேட் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, சரவெடி உற்பத்தி செய்வதற்கான தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமான உற்பத்தியில் 60 விழுக்காடு வகை பட்டாசுகள் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் பெரும்பாலான ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மூலப்பொருள்களின் விலையேற்றம், லாரி வாடகை உயர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக ஆலைகளில் அடக்க விலை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, சில்லறை விற்பனைக் கடைகளில் பட்டாசு விலை 20 முதல் 25 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் ஆடிப் பெருக்கு அன்றே பட்டாசு விற்பனை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் தீபாவளிக்கான தற்காலிகக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், உற்பத்திப் பற்றாக்குறை, விலை உயர்வு காரணமாக, பண்டிகை நெருங்கும் வேளையில் மக்கள் அதிகம் விரும்பும் சில வகை பட்டாசுகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்