நாகை: புயல் எச்சரிக்கையால் 10 நாள்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள்.
நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள், ‘டிட்வா’ புயல் எச்சரிக்கை, கனமழையின் காரணமாக கடந்த 10 நாள்களாகக் கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில், இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) மீண்டும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.
புயல் காரணமாக நாகை, காரைக்கால் பகுதிகளில் கனமழையுடன் கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்பட்டது.
அதன் விளைவாக, மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கடந்த 24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
அதனால், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவ கிராமங்களின் மீனவர்கள், காரைக்கால் மாவட்டத்தின் 11 மீனவ கிராமங்களின் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் முடங்கியது.
கடந்த இரண்டு நாள்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை குறைந்ததையடுத்து, 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 3,000க்கும் மேற்பட்ட சைபர் படகுகளிலும் ஏராளமான மீனவர்கள் அணிவகுத்து துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் நோக்கிப் பயணமானார்கள்.
அவர்களைப்போல் காரைக்கால் மேடு, கிழிஞ்சல் மேடு, காசைக்கொடு மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
நீண்ட நாள்களுக்குப் பிறகு கடலில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்வாதாரம் மீளும் என்ற மகிழ்ச்சியில் கடலுக்குச் சென்றிருக்கின்றனர் மீன்வர்கள்.

