கோவை: உலக அளவில் தலைசிறந்த இரண்டு விழுக்காட்டு விஞ்ஞானிகளின் அனைத்துலகப் பட்டியலில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மூத்த பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், அனைத்துலக ஆய்விதழ் நிறுவனமான ‘எல்சிவியர்’ ஆகியவை இணைந்து உலக அளவில் அதிக ஆராய்ச்சி மேற்கோள்களைப் (Citations) பெற்ற விஞ்ஞானிகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
20 அறிவியல் துறைகள், 174 துணைத் துறைகளைச் சேர்ந்த சிறந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள், அவற்றுக்கு உலக அளவில் கிடைத்த மேற்கோள்கள், அறிவியல் அளவீடுகளின் அடிப்படையில் இந்தத் தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு வெளியான பட்டியலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் ரவீந்திரன், முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர் சுப்ரமணியன், வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார், வேளாண் பயிர் வினையியல் துறைப் பேராசிரியர் ஜனகிராமன் ஆகிய நான்கு பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து இருவர் மட்டுமே தேர்வாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு நான்கு பேராசிரியர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது கல்வி, ஆராய்ச்சித் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
