அடுத்த 7 நாள்களுக்குக் கனமழை: வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை

அடுத்த 7 நாள்களுக்குக் கனமழை: வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை

படம்: இந்து தமிழ் திசை

20 Oct 2026 - 6:58 pm

2 mins read

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் மேலும் ஏழு நாள்களுக்குக் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதோடு, அங்கிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வு நிலையும் நீடித்து வருகிறது. அதையடுத்து, தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கன முதல் மிகக் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்களில், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

கேரளா, கர்நாடகக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 184.0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்