மதுரை: தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்துகள், ஆக்கிரமிப்புகள் குறித்தும் அவற்றை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்குச் சொந்தமான 630 ஏக்கர் நிலங்கள் போலி ஆவணங்கள்மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன.
“மேலும், வணிகக் கட்டடங்களுக்கான வாடகையும் முறையாக வசூலிக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கவும் உரிய வாடகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அம்மனு நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கோவில் நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பவும் தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழுள்ள கோவில்கள் எத்தனை, அவற்றின் நிலப் பரப்பளவு, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள், நில நிலுவை வழக்குகள் குறித்து மாவட்ட வாரியாக அறநிலையத் துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்க தனிக்குழு அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
