தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் இந்தி பெயர்ப்பலகை அகற்றம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் இந்தி பெயர்ப்பலகை அகற்றம்

படம்: இந்து தமிழ் திசை

09 Oct 2026 - 7:01 pm

2 mins read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்தி பெயர்ப்பலகையை அகற்றக்கோரி கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை அடுத்து, அப்பலகை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

அதனுடன் சேர்த்து தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான பெயர்ப்பலகைகளும் அகற்றி மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘அம்ரித் பாரத்’ நிலையத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் ரயில் நிலையம் சுமார் 21 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி, தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரியில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வடிவமைக்கப்பட்ட முகப்பின் மையப் பகுதியில் ‘தஞ்சாவூர் சந்திப்பு’ எனும் பெயர்ப் பலகை இந்தியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

வரலாற்று சிறப்புமிக்க பெரிய கோயில் மாதிரி வடிவின் நடுவே இந்திப் பலகை அமைக்கப்பட்டதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.

மையப் பகுதியில் தமிழுக்கே முன்னுரிமை அளித்துத் தமிழ் பெயர்ப்பலகையைப் பொருத்த வேண்டும் என்றும், இந்திப் பலகையை வேறொரு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தித் தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உட்படப் பல முக்கிய நிர்வாகிகள் ரயில் நிலையம் முன்பாகத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாகச் சென்று இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலான பெயர்ப்பலகைகளையும் அகற்றினர்.

அதனையடுத்து, திரண்டிருந்த திமுகவினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

குறிப்புச் சொற்கள்
இந்திதஞ்சாவூர்ரயில் நிலையம்