காஞ்சிபுரம்: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு ஏறக்குறைய 55 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை விஜய் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) மீண்டும் தொடங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய விஜய், ‘குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்கமாட்டேன்’ என்று ‘மர்மயோகி’ படத்தில் எம்ஜிஆர் ஒரு வசனம் பேசியிருப்பார். அதைக் குறிப்பிட்டு, “நான் இப்போது இதனை ஏன் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும்.
“ஏன் இவரைத் தொட்டோம், இவருடன் இருக்கும் மக்களைச் சீண்டினோம் என அவர்கள் வருந்தும் நிலை வரும்,” என்று எம்ஜிஆர் பாணியில் எச்சரிக்கை விடுத்தார்.
“எங்கள் கட்சியை ஆதரிக்கும் இளைஞர்கள் ‘தற்குறிகள்’ அல்ல; தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான ‘ஆச்சரியக்குறிகள்’. இவர்கள் ஆளுங்கட்சியின் அரசியலைக் ‘கேள்விக்குறி’ ஆக்கப் போகிறார்கள்.
‘கூத்தாடி’ விமர்சனத்திற்குப் பதில்
“54 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதும், அவரை ‘கூத்தாடி’, ‘நடிகர் கட்சி’ என்றெல்லாம் விமர்சித்தனர். ஆனால், விமர்சித்தவர்களே பின்னர் அவருடன் இணைந்தனர். ஒட்டுமொத்த மக்களும் எம்ஜிஆர் பக்கமே நின்றனர். அதே பழைய ‘கதறல்’ இப்போதும் கேட்கிறது. இந்த வரலாறு மீண்டும் தொடரும்,” என்றார் விஜய்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய சிறப்பு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
திமுகவின் விமர்சனங்களுக்கு எம்ஜிஆரின் புகழ்பெற்ற சினிமா வசனத்தை மேற்கோள் காட்டி விஜய் பதிலடி கொடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

