சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிரித்துள்ளது. இது மாநில பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2021 முதல் 2025 வரை சென்னை நகர்ப்புறப் பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொழுநோய் பாதிப்புகள் குறித்த ஆய்வை தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்டது. இதற்கான குழுவில் மூன்று மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆய்வின்போது, தமிழகத்தில் சராசரி தொழுநோய் பாதிப்பு விகிதத்தைவிட, சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம் அதிகமாக இருப்பது உறுதியானது.
வயது, பாலினம், தொழுநோயின் வகை-குறைபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 515 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. 2020-21ல் லட்சத்தில் 1.0ஆக இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-25ல் 1.3%ஆக உயர்ந்துள்ளதை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
புலம் பெயர்ந்தவர்கள் மூலம் இத்தகைய தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தொழிற்சாலைகள், மாவட்ட எல்லைப் பகுதிகளில் தொழுநோய் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

