நடிகர் வீட்டில் நகை திருட்டு; பணிப்பெண் கைது

1 mins read
114ffde1-677c-42e0-9494-d176d1c5302f
நடிகர் கருணாகரன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர் கருணாகரன் வீட்டில் 60 சவரன் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது வீட்டில் வேலை செய்துவந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடிகர் கருணாகரன் வசித்து வருகிறார். காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயா, 44, என்ற பெண் அவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்தார்.

இந்நிலையில், கருணாகரன் வீட்டிலிருந்து 60 சவரன் நகைகள் திடீரெனக் காணாமல் போயின.

அதனைத்தொடர்ந்து, கருணாகரனின் மனைவி காவல்துறையில் புகாரளித்தார்.

அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, விஜயாமீது சந்தேகப்பட்டனர். காவல்துறை விசாரித்ததில் நகைகளைத் திருடியதை விஜயா ஒப்புக்கொண்டதாகத் தமிழக ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, அவரைக் கைதுசெய்த காவல்துறை, அவரிடமிருந்து நகைகளையும் மீட்டது.

சுந்தர்.சி. இயக்கிய ‘கலகலப்பு’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமான கருணாகரன், அதனைத் தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’, ‘லிங்கா’, ‘இறைவி’, ‘மெய்யழகன்’ உட்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்