கரூர் நெரிசல் சம்பவம்: விசாரணையை மேற்பார்வையிடும் இரு ஐபிஎஸ் அதிகாரிகள்

கரூர் நெரிசல் சம்பவம்: விசாரணையை மேற்பார்வையிடும் இரு ஐபிஎஸ் அதிகாரிகள்

படம்: இந்திய ஊடகம்

23 Oct 2025 - 7:50 pm

2 mins read

புதுடெல்லி: கருர் விஜய் பிரசாரக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ) வியாழக்கிழமை (அக்டோபர் 23) கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. அறிக்கையைப் பெற்றுக்கொண்ட நீதிமன்றம் அதனை மதுரை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாம் என்று கூறப்படுகிறது.

சிபிஐ குழுவினர், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், படுகாயம் அடைந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தரப்பினரிடம் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். 110 பேர் படுகாயம் அடைந்தனர். அச்சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு தனிநபர் விசாரணையையும், காவல்துறை சிறப்பு விசாரணையையும் நடத்தியது.

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி.பிரவீன் குமார் தலைமையில், அதிகாரிகள் கடந்த 17ம் தேதி கரூர் வந்தனர். ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு சிபிஐ குழுவினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகளான எல்லைப் பாதுகாப்புப் படையில் ஐஜியாகப் பணிபுரியும் தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண், டெல்லியில் ரிசர்வ் காவல் படை ஐஜியாகப் பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சுமித் சரண், அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை நகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியவர். சோனல் வி.மிஸ்ரா சென்னை, திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்