கரூர்: கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இத்துயர நிகழ்வின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே தவெக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கட்சியினரும் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், உயிரிழந்தவர்களின் பெயர்களுடன் படங்களும் இடம்பெற்றிருந்தன.
உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு கடந்துவிட்டது. இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில், “கடந்த ஆண்டு இதே நாள் என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், ஆறாத ரணமாக அமைந்துவிட்டது. நாம் அனைவரும் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம். உயிரிழந்த உறவுகளுக்கு ஆறுதலாகவும் அரணாகவும் நாமே இருப்போம்,” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
