எரிவாயுப் பேருந்துகளால் பல லட்சம் மிச்சம்: கைகொடுத்த புதிய தொழில்நுட்பம்

2 mins read
59134ec5-bee1-4c90-bc0e-91444dc914ff
தமிழக அரசு விரைவுப் பேருந்து. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளால் மாதாமாதம் 3 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிவதாக தமிழக அரசின் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, நவம்பர் 12ஆம் தேதி சோதனை அடிப்படையில் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சிஎன்ஜியாக மாற்றம் செய்யப்பட்ட விரைவுப் பேருந்து இயக்கப்பட்டது.

சோதனை ஓட்டத்தில் எவ்விதச் சிக்கலும் எழாத நிலையில், ஓட்டுநரும் நடத்துநரும் ஆதரவான கருத்துகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, சென்னை -சேலம் வழித்தடத்திலும் சிஎன்ஜி விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போதைய நிலவரப்படி விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 4 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருளுக்கான செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

“பி.எஸ். 4 வகை டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு என்பதுடன், பராமரிப்புச் செலவு, இயக்கச் செலவு ஆகியன வெகுவாகக் குறைகிறது.

“இந்தப் பேருந்துகளைச் சோதனை முறையில் மாற்றியமைப்பதற்கு எரிவாயு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன.

“திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்தை ஐஆா்எம் என்ற நிறுவனமும், சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்தை இந்தியன் ஆயில் நிறுவனமும் சிஎன்ஜியாக மாற்றியமைத்துள்ளன.

“இவ்வகைப் பேருந்துகள் மூலம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை மிச்சமாகிறது.

“அதன்படி, ஒரு பேருந்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் மிச்சமாகிறது. நான்கு பேருந்துகளுக்கும் சோ்த்து ரூ.3 லட்சம் வரை விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் சேமிக்க முடிகிறது.

“தற்போது சோதனை முறையில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இது தொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும்.

“தொடா்ந்து, அரசு பரிசீலித்து, திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் சில பேருந்துகள் சிஎன்ஜி-யால் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்,” என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்