சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநகரில் உள்ள தங்குவிடுதிகள் இவர்களின் வீடுகளாக மாறியுள்ளன.
இதனால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாக இந்த விடுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னைக்கு வருகிறார்கள். இவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் ஏராளமான தனியார் விடுதிகள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இலங்கை, பங்ளாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பல பெண்களை சென்னையில் இயங்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகள் வாடகைத் தாய்மார்களாக ஒப்பந்தம் செய்கின்றன.
அப்பெண்கள் மருத்துவமனைக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். தங்குவதற்கு இடம் கிடைக்காத பட்சத்தில், அருகில் உள்ள விடுதிகளில் தங்க நேரிடுகிறது.
பல பெண்கள் மாதக்கணக்கில் தங்குவதாலும் தொடர்ந்து பலர் வாடகைத் தாய்மார்களாக மாறி வருவதாலும் தங்குவிடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. எனவே, விடுதிகள்கூட இப்போது வாடகை வீடுகளைப் போல் மாறிவிட்டன.
“விடுதி நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும், செலவுகளும் அதிகம். வாடகைத் தாய்மார்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்பதைவிட, நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதுதான் பெரிது,” என்கிறார்கள் விடுதி உரிமையாளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், பெரும்பாலும் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள்தான் இதுபோன்ற இடங்களில் தங்குகிறார்கள்.
இதனால் அண்டை வீட்டாருடனான தகவல் பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்படுவதாகவும் அறிமுகமற்ற பலர் வந்துபோவது நிரந்தர குடியிருப்புவாசிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.