கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் - பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில், மாயமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆண்டிக்கோல முருகன் சிலை வெற்றிகரமாக மீட்கப்பட்டு மீண்டும் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது.
போகர் சித்தரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் அந்தப் பழைமையான சிலை, கடந்த ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வின்போது திடீரென அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ராஜ அலங்காரத்துடனான புதிய சிலை வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், முதல்வருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் விரிவான புகார் மனுக்களை அனுப்பினர்.
அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில், கோவிலின் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி சிலையை அகற்றியதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்படி, கோவில் குளத்தின் சுனை நீரில் மூழ்கடிக்கப்பட்டிருந்த பழைமையான பாலதண்டாயுதபாணி சிலை பத்திரமாக மீட்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு, மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, மீட்கப்பட்ட தொன்மைவாய்ந்த முருகன் சிலைக்குச் சிறப்பு யாகசாலை பூசைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள், அரசு அதிகாரிகளின் முன்னிலையில், அச்சிலை மீண்டும் கோவில் கருவறையில் முறைப்படி நிறுவப்பட்டது.
இதனால் தோகைமலை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
