சென்னை: தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய வசதி அளிக்கப்பட இருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட இந்த அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் 100 Mbps வேகத்தில் இணையச் சேவை வழங்கப்படும் என்றும் இதன் மதிப்பு ரூ.200ஆக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசியபோதே, அத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
“தமிழகத்தில் ‘கேபிள் டிவி’ சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. அதேபோல் வீடுதோறும் 100 Mbps வேகத்தில், ரூ.200 கட்டணத்தில் இணையச் சேவை வழங்கப்படும்.
“மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ‘இ-சேவை’ மையங்களில் பெறக்கூடிய சேவைகள் அனைத்தும் ‘வாட்ஸ்அப்’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“அரசின் புதிய திட்டத்தின் முதற்கட்டமாக, 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி அளிக்கப்பட்டுள்ளது.
“4,800 கிராமப் பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த கிராமங்களில் இணைய இணைப்புக்குத் தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையச் சேவை கிடைக்கும் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
அண்மையில், சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, திமுக உறுப்பினர் முன்வைத்த ஒரு கோரிக்கை தொடர்பாகப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமது துறையால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது என்றும் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெறும் தொழில்துறை அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேரவையில் இருந்தார். அவரது முன்னிலையில் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு பதிலளித்தது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக அரசுக்குப் பாராட்டு கிடைக்கும் வகையில் அவர் தனது துறை சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

