மாநில உரிமையை மீட்க வேண்டிய தருணம் இது: மு.க.ஸ்டாலின்

2 mins read
49025e3d-edb2-44a2-9b88-d6ef5eac4e68
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதையை அவர் பார்வையிட்டார். - படம்: ஊடகம்

சென்னை: ‘தாயின் மணிக்கொடி பாரீர்! அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!’ எனச் சொல்லி 79வது சுதந்திர தின உரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

மேலும் அவரது உரையில், மாநில அரசுகள் தங்கள் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து மீட்கும் தருணம் இதுவே என்று கூறியுள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளில், நமது அரசியல் களம் கண்ட மாற்றங்களால், இந்த அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளையும் மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிலையையும் நாம் காண்கிறோம்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட, மாநில அரசுகளுக்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், இதற்கு நேர்மாறாக கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், மத்திய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றைக் களைந்திட மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே ஒரே தீர்வு.

இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன்.

மாநிலத்துக்குக் கிடைக்கவேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெறவேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். இது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரவேண்டும். அப்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்.

தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்