தொழில்நுட்பக் கோளாறு: நூற்றுக்கும் மேற்பட்ட விமானச் சேவை பாதிப்பு

1 mins read
b77cfee1-ada3-4ca3-9e30-852af325a796
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியை பொறியாளர்களும் அதிகாரிகளும் தீவிரமாக மேற்கொண்டனர். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானச் சேவை பாதிப்புக்குள்ளானதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்றும், அங்கு பயன்படுத்தப்படும் செயலியின் (Software) செயல்பாடு பாதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியை பொறியாளர்களும் அதிகாரிகளும் தீவிரமாக மேற்கொண்டனர்.

எனினும், டெல்லியில் இருந்து விமானங்களின் புறப்பாடு, வருகை பாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டதுடன், அவற்றில் இருந்த பயணிகளும் அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே, காத்திருந்த பயணிகளிடம் டெல்லி விமான நிலைய நிர்வாகம் மன்னிப்பு கோரியது.

விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட விமானப் பயண நேர அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் பயணிகள் அனைவரும் தங்களின் விமானப்பயணம் குறித்த விவரங்களை அறிய தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனிடையே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அனைத்து விமானங்களின் புறப்பாடுகள், வருகைகள் தாமதமானதாகவும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்