கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பில் சிறுத்தையிடமிருந்து ஐந்து வயது மகனைத் தாய் ஒருவர் வீரமாகப் போராடி மீட்டுள்ளார்.
ரொட்டிக்கடை மேற்பாராலை பகுதியைச் சேர்ந்த குருசாமியின் மனைவி நாகஜோதியின் மடியில் அமர்ந்து அவரது மகன் தீக்சிதன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அருகில் இருந்த தேயிலைப் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை திடீரெனப் பாய்ந்து சிறுவனைக் கவ்விக்கொண்டு ஓடியது.
தன் கண்முன்னே மகன் சிறுத்தையின் வாயில் சிக்கியதைக் கண்ட நாகஜோதி, சற்றும் பயமின்றிச் சிறுத்தையைப் பின்தொடர்ந்து அலறியபடி ஓடினார்.
ஏறத்தாழ நூறு அடி தூரத்திற்கும் மேலாக சிறுத்தையைத் துரத்திச் சென்ற தாய், மரக்கட்டைகளை வீசித் துணிச்சலாகப் போராடினார்.
தாயின் தொடர் கூச்சலாலும் விடாப்பிடியான துரத்தலாலும் மிரண்ட சிறுத்தை, சிறுவனைத் தோட்டத்தில் போட்டுவிட்டுப் புதருக்குள் ஓடி மறைந்தது.
சிறுத்தையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் தீக்சிதனின் தலை, காதுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான்.
இச்சம்பவம் குறித்து வனத்துறை, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
