புதுடெல்லி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜகவுக்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அக்கட்சித் தலைமை நியமித்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வலதுகரமாகக் கருதப்படும் பியூஷ் கோயல் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாஜக கூட்டணியில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதையடுத்து, இவ்விவகாரங்களைக் கவனிக்கவும் தேர்தலை எதிர்கொள்ளவும் முழு வீச்சில் தமிழக பாஜகவைத் தயார் செய்ய ஏதுவாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை இணை அமைச்சார் அர்ஜுன் ராம், மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளீதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2014, 2019, 2024 ஆகிய மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் பாஜக சார்பாக தமிழக பார்வையாளராகச் செயல்பட்டார் அமைச்சர் பியூஷ் கோயல். இந்த முறையும், அக்கட்சித் தலைமைக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் அவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விரைவில் நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநிலத்தில் பாஜக வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 65 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலை அவர் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
நயினார் நாகேந்திரன் வழங்கிய பட்டியலில் உள்ள தொகுதிகள், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு விழுக்காட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கியத் தொகுதிகள்
கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், குமரி, நெல்லை உள்ளிட்ட முக்கியமான தொகுதிகள் அந்த 65 தொகுதிகள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தாம் மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்ததாகவும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

