சென்னை: கோவில் குடமுழுக்கு போன்ற புனிதமான நிகழ்வுகளில் சாதி, இன ரீதியாக அரசியல் செய்ய முற்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதுரகாளியம்மன், கருப்பண்ண சாமி உள்ளிட்ட திருக்கோவில்களுக்கான கோவில் குடமுழுக்கு விழா வரும் 25ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிற சமுதாயத்தினரின் இடையூறோ எதிர்ப்போ இன்றி குடமுழுக்கை அமைதியான முறையில் நடத்தக்கோரி, அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவில் பல முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
குடமுழுக்கு விழாவில் சாதி, மதம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வழிபாட்டில் பங்கேற்பதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட அறக்கட்டளை அல்லது பிரிவினரைத் தவிர பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றால், காவல்துறை அத்தகைய விஷமத்தனமான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆன்மிகச் சடங்குகள் நடைபெறும் இடங்களில் சாதிய உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்ய நினைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
