சென்னை: டித்வா புயல் காரணமாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த நான்கு நாள்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் சூழ்ந்த பல பகுதிகளில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிட்டது.
சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பாக அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், வேளச்சேரி, பட்டாளம் உள்பட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கனமழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
கோடம்பாக்கம், வடபழனி, ஆற்காடு சாலை, பவர் ஹவுஸ், தியாகராய நகர், தாம்பரம், போரூர், திருவொற்றியூர், செங்குன்றம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கியது. போரூரை அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் வேன், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டன.
கோடம்பாக்கம், வேளச்சேரி, ராயபுரம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பாலங்களின் இரு பக்கங்களிலும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியது. கடற்கரை மணற்பரப்பில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால், கடற்கரைக்குச் செல்ல மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களும் அடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

