மருத்துவர் பற்றாக்குறையால் தமிழகத்தில் மகப்பேற்று மரணங்கள் அதிகரிப்பு

2 mins read
f26ec4bf-0da5-48d4-85ac-d88b1843bf55
தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மகப்பேற்று இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால் மகப்பேற்று இறப்பு அதிகரிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளைச் சரிசெய்ய சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார்.

“துறையில் உள்ள அடிப்படைத் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது.

“தமிழகத்தில் கிட்டத்தட்ட கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

“நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதுபோல செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.

“நீண்டகாலமாக அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. அதுவும் ஏற்கெனவே உள்ள அரசாணை 354ஐ அமல்படுத்துவதற்கே ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறோம்.

“தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களையும் தாதியரையும் நியமனம் செய்யாமல், மகப்பேற்று இறப்பைக் குறைக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கப்படுவது எந்தவகையிலும் உதவாது.

“தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மகப்பேற்று இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“போதிய எண்ணிக்கையில் மகப்பேற்று மருத்துவர்களை அரசு நியமிக்காததால், வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது. அதனால் பணியில் தொடரமுடியாமல் பலர் விலகி விடுகின்றனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்