அரசியல் கட்சிகள்தான் பொறுப்பு: தமிழக அரசு திட்டவட்டம்

அரசியல் கட்சிகள்தான் பொறுப்பு: தமிழக அரசு திட்டவட்டம்

படம்: ஊடகம்

21 Nov 2025 - 9:21 pm

2 mins read

சென்னை: அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

“கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. அனுமதித்த நேரத்தைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்,” என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்