ராமேசுவரம்: பாம்பன் கடற்கரையில் துணிகளை வீசி எறிவதால் தங்களுடைய பாவங்கள் நீங்கும் என பக்தர்கள் கருதுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு லட்சக்கணக்கானோர் சபரிமலை சென்று வழிபட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் பலர் கேரளா செல்லும் முன்பு தமிழக ஆன்மீகத் தலங்களுக்கும் வருகை புரிகின்றனர். அந்த வகையில், ராமேசுவரத்துக்கும் பிரதான பக்தர்கள் செல்கிறார்கள்.
இந்நிலையில், சபரிமலை பக்தர்கள் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும்போது, பாம்பன் கடற்கரையில் ஆடைகளைத் தானம் செய்யும் நடைமுறை உள்ளது. அவற்றைக் கடலில் விட்டுச் சென்றால் பாவங்கள் நீங்கும் என ஒரு தகவல் பரவியுள்ளது.
இதை நம்பி நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களிடமுள்ள பழைய உடைகளை பாம்பன் கடற்கரையில் வீசிச் செல்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்யக்கூடாது என் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பக்தர்கள் இவ்வாறு வீசும் துணிகள், மீன்பிடிப் படகுகளைச் சுற்றிக்கொண்டு, அவை சேதமடைவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பாம்பன் கடல் பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

